Wednesday, February 29, 2012

கிரிக்கெட் ( INDIA V SRILANKA )



Virat Kohli celebrates his ninth ODI ton, India v Sri Lanka, CB series, Hobart, February 28, 2012

தோல்வித் தழும்புகளை உடலெங்கும் வாங்கியிருந்த இந்தியஅணி
இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷத்தோடு ஆடியது.
தில்ஷனும் ( 160 ),சங்கக்காராவும்(105 )அடித்தஅடியில் ஒட்டுமொத்த
இந்திய அணியும் மிரண்டுபோனது. 321 ரன்களை எடுப்பதே சிரமம்.
அதுவும் 40  ஓவருக்குள்ளாக எடுத்தால்தான் போனஸ் பாயின்ட்டோடு
இறுதிப்போட்டிக்கு  முன்னேறுவதைப் பற்றி  நினைக்கலாம்  என்ற
சூழ்நிலையில் தான் இந்தியஅணி பேட்  செய்ய ஆரம்பித்தது. இது
கொஞ்சம்கூட சாத்தியம் இல்லாத ஒன்று என்றுதான் என்னைப் போல்
பலரும் நினைத்திருப்பார்கள்.ஆனால்,ஹோபார்ட் மைதானத்தில் மேஜிக்
நிகழ்ந்தது. சச்சினும்,சேவாக்கும் அதிரடி துவக்கம்தர, அதைவைத்து
கம்பீரும், கோஹ்லியும் ராஜபாட்டை போட்டனர். ஒருகட்டத்தில்
கோஹ்லியின் ஆட்டத்தில் ' தானே ' புயல் வேகம் தெரிய 37  ஓவர் 
முடிவதற்குள் இந்தியஅணி சாதனை வெற்றி பெற்றது.கோஹ்லி 86 
பந்துகளில் 133 ரன்கள் அடித்து இலங்கை அணியினரை மிரள வைத்தார்,
இந்திய ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.ஆனாலும்,சின்னதாய் ஒரு 
வருத்தம் இருக்கத்தான் செய்தது.அதிக கூட்டமில்லாத ஸ்டேடியத்தில் 
கை தட்டக்கூட ஆளில்லை என்பதுதான் அது. நேற்று  நாம்  வெற்றி
பெற்றாலும் முழுகிணறு தாண்டியதாக அர்த்தம் இல்லை.வெள்ளியன்று
நடக்கப்போகும்  ஆஸ்திரேலியா,இலங்கை மேட்ச்சை வைத்துத் தான்
நாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோமா என்று தெரியும்.கடைசிவரை 
டென்ஷனோடு இருப்பது நமக்கும் புதிதல்ல, நம் இந்திய அணிக்கும்
புதிதல்ல. காத்திருப்போம் நகக்கடிப்போடு.                      

Monday, January 30, 2012

அஹிம்சை அரசர் காந்தி


ஜனவரி-30 , அஹிம்சையை கொன்றதினம் என்பதா? இந்தியாவுக்கு தீராத
துக்கதினம் என்பதா?ஒவ்வொரு வருடமும் காந்தியடிகளின் இறந்தநாள்
இப்படித்தான் கேள்வியோடு தொடங்கி கேள்வியோடு முடிகிறது எனக்கு.
காந்தி- மனிதரில் ஒரு கடவுள். கடவுளில் ஒரு மனிதர்.     

நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்  என்பது மட்டும் அவர் வரலாறு 
இல்லை.தனிமனித ஒழுக்கம்,பொறுமை,சகிப்புத்தன்மை இதெல்லாம்தான் 
அவரை மகாத்மா ஆக்கிய மகத்தான சக்திகள். நாம் அவசியம் பின்பற்ற
வேண்டிய குணங்களும்கூட.காந்தி தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி
தன் வாரிசுகளுக்கு சுதந்திர இந்தியாவில் எவ்வித பதவியையும் வாங்கித் 
தரவில்லை.சொல்லப்போனால் அவர்களைப்பற்றி நமக்கு பெரிதாக எதுவும்
தெரியாது. ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள்
வாரிசுகளை வளர்த்து உயர்பதவிகளில் அமரவைத்து அழகுபார்ப்பதோடு
கோடி,கோடியாய் கொள்ளையடித்து நாட்டையும் சுரண்டிக் கொண்டிருக் 
கின்றனர்.

இந்தியாவில் தான் காந்தியக் கொள்கைகள் மதிப்பிழந்து போய்விட்டன.
ஆனால், உலகநாடுகள் எல்லாம் காந்தியின் அஹிம்சை வழிதான் 
இன்றைக்குத் தேவை என்று ஒருமித்த குரலில் சொல்வதுதான் அந்த 
மகாத்மாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. காந்திவழி நடப்போம்.
தீவிரவாத, மதவாத கலாச்சாரங்களை ஒழிப்போம். அதுதான் அந்த 
தேசப்பிதாவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.                    

Monday, December 19, 2011

ஏழு ஓட்டு ! (சிறுகதை)



திராவிடபாண்டியன் வீட்டின் முன்னால் ஒரே வெடிச்சத்தம். எம்.எல்.ஏ
தேர்தலில் அவர் வெற்றிபெற்ற சந்தோஷத்தைத்  தான் அவரது
ஆதரவாளர்கள் இப்படி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

உள்ளே திராவிடபாண்டியன் தன் தீவிர தொண்டர்களிடம்,"நாம எல்லாரும்
இப்ப அந்த வெற்றிவேலைப் பாத்து நன்றி சொல்லிட்டு வருவோம்"என்றார்.

"யாரு,உங்கள எதிர்த்து போட்டியிட்டு தேர்தல்ல  தோத்துப்போன அந்த
வெற்றிவேலையா பாக்கணும்னு சொல்றீங்க?தலைவரே, உங்களுக்கு
என்னாச்சு?ஏன் இப்டி தப்புத்தப்பா பேசுறீங்க?"என்று ஒருவன் கேட்க,


"நாம எத்தனை வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சோம்கிறது மறந்து
போயிடிச்சா?வெறும் ஏழு வோட்டு வித்தியாசம்டா.தேர்தலுக்கு முன்ன
ஒரு நாள் நம்ம கட்சிக்காரங்க பிரச்சாரத்தை முடிச்சிகிட்டு ராத்திரி
பதினோரு மணிக்குமேல கார்ல வீட்டுக்கு போகும்போது அது ரோட்டோரமா
இருந்த பெரிய பள்ளத்துல விழுந்து விபத்துக்குள்ளாகி,அதுல இருந்த ஏழு
பேரும்  உயிருக்கு  போராடிக்கிட்டு  இருந்தப்ப, அந்த வழியா வந்த
வெற்றிவேல் அவங்கள தூக்கிட்டுபோய் ஹாஸ்பிட்டல்ல சேத்ததால
உயிர் பிழைச்சாங்க. அந்த ஏழுபேரும் வோட்டு போடலேன்னா  நான்
இன்னிக்கு எம்.எல்.ஏ இல்ல.அன்னிக்கு அது நம்ம கட்சிக்கொடி பறந்த
காருன்னு  தெரிஞ்சும்  மனிதாபிமானத்தோட  நம்ம  ஆதரவாளர்கள
காப்பாத்தினாரு வெற்றிவேல். அந்த நன்றியை எப்படிடா மறக்கமுடியும்?
அன்னிக்கே கந்துவட்டி,கட்டப்பஞ்சாயத்துன்னு ரௌடித்தனம் பண்ணிக்
கிட்டு இருந்த திராவிடபாண்டியன் செத்துப் போயிட்டான்டா. இப்ப புது
மனுஷனா மக்களுக்கு  தொண்டு  செய்யப்போறேன். அதோட  அந்த
வெற்றிவேல் எம்.எல்.ஏ ஆனா இந்த தொகுதிக்கு என்னென்ன நல்லகாரியம்
செய்ய ஆசைப்பட்டாரோ அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து நான்
செய்யப்  போறேன்"என்ற திராவிடபாண்டியன் காரில் ஏறி அமர, அது வெற்றிவேல் வீட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது.

       
         

Sunday, December 11, 2011

பாரதி நினைவலைகள்


டிசம்பர்-11 பாரதியார் பிறந்தநாள்.எத்தனை பேருக்கு இது ஞாபகமிருக்கும்
என்று தெரியவில்லை! நடிகர்களின் பிறந்தநாளை  ஞாபகம்  வைத்துக்
கொள்ளுமளவுக்கு ஒரு மகாகவிஞனின் பிறந்தநாள் தெரியாமல் போனது
வேதனையான விஷயம்.

      "காலா  உனை  நான்  சிறு   புல்லென மதிக்கிறேன்! - என்றன்   
      காலருகே  வாடா, சற்றே  உனை  மிதிக்கிறேன். "

என்று எமனைப் பார்த்து பாடியவர் வாழ்ந்ததோ 39 வருடங்கள் மட்டுமே.
ஆனால்,அவர் கவிதைகள் 39 யுகங்களை தாண்டியும் நிற்கும்,பேசப்படும்.


முரட்டு மீசை,தலைப்பாகை என்று அவர் முகத்தில் இருக்கும் கம்பீரம்
அவர் கவிதைகளிலும் இருக்கும்.

பாரதி ஒரு தீர்க்கதரிசி.அதனால்தான் நாடு விடுதலையாகும் முன்பே

      "ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
       ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் "

என்று பாடினார்.

பாரதி ஒரு புதுமை விரும்பி. அதனால்தான்  எல்லோரும்  தாய்நாடு,
தாய்நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது

      "தந்தையர்  நாடென்ற பேச்சினிலே - ஒரு
       சக்தி பிறக்குது மூச்சினிலே "

என்று பாடினார்.

பாரதி ஒரு பெண் சுதந்திர விரும்பி . அதனால்தான்

      "எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
       இளைப்பில்லை காணென்று கும்மியடி " என்றும்

      "கற்பு நிலையென்று சொல்லவந்தார், இரு
       கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் "

என்றும் பாடினார்.

      "தனியொருவனுக்  குணவிலையெனில்
       ஜகத்தினை அழித்திடுவோம் "

என்று பாடிய பாரதியின் வாழ்க்கையில் பெரும்பகுதி பசியும்,வறுமையும்
கலந்தே இருந்தது.

வாழும்காலத்தில் அவரை அங்கீகரிக்கவும்,அரவணைக்கவும் தவறிவிட்டது
தமிழ்ச் சமுதாயம். அந்தக்  கோபம்  தமிழ்த்தாய்க்கு  இன்னும்  இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.             

Saturday, December 10, 2011

ஆத்மாவின் அலறல் ! (சிறுகதை)



நாராயணசாமி  ஊரறிந்த  சமூகசேகவர். அவர்  திடீரென்று  ஹார்ட்
அட்டாக்கில்  இறந்துபோக, அவருக்கு  இறுதிமரியாதை  செலுத்த
சொந்த ஊரிலிருந்து மட்டுமில்லாமல் அக்கம்,பக்க ஊரிலிருந்தும்
நிறையபேர் திரண்டிருந்தனர்.

அதில் ஒருவர், "நாராயணசாமி மனுஷங்ககிட்ட மட்டுமில்ல,வாயில்லா
ஜீவன்கள்கிட்டயும் அன்பு காட்டினவர். ஆறுமாசம் முன்ன  ஒரு குதிரை
அடிபட்டு,ஒடம்பெல்லாம் காயத்தோட உயிருக்கு போராடிகிட்டு நம்ம
ஊருக்குள்ள  எப்படியோ வந்தப்ப நாம யாரும் அத கண்டுக்கல. அப்ப
நாராயணசாமி தான் டவுன்ல இருந்து வெட்னரி டாக்டரை கூட்டிவந்து
வைத்தியம் பாத்து குதிரைய பொழைக்க வெச்சார்" என்றார்.

"சமூகசேவைக்காக கல்யாணமே செஞ்சுக்காதவர்.இப்பக்கூட பாருங்க
கண்களையும் தானம் பண்ணியிருக்கார்"என்று இன்னொருவர் புகழ,

"சரி,சரி பொழுது போயிட்டிருக்கு.பாடிய எடுத்துடலாம்"என்று ஊர்த்
தலைவர் சொல்ல,

"தலைவரே,நாராயணசாமி செத்திருக்கிறது சனிக்கிழமை.சனிப்பொணம்
தனியா போவாது,துணை கேக்கும்னு சொல்வாங்க.அதனால, அவர்
பாடியோட ஒரு கோழிக்குஞ்சை கொன்னு பொதைச்சுடலாம்" என்று
மாரியம்மன் கோயில் பூசாரி சொல்ல,தலைவரோடு ஊரும் ஏற்றுக்
கொண்டது.

நாராயணசாமியின் உடல் மயானக்குழிக்குள் இறக்கப்பட்டு,கோழிக்குஞ்சு
ஒன்றையும் அறுத்து அதே குழியில் போட்டபோது,"பாவிகளா! என்னை
ரெண்டாவது முறையா சாகடிச்சுட்டீங்களே"என்று நாராயணசாமியின்
ஆத்மா அலறியது யாருக்கும் கேட்கவேயில்லை!
                      

Friday, December 9, 2011

கிரிக்கெட் (IND V WI)



சேவாக்கைப் பற்றி என்ன சொல்ல? டெஸ்ட் மேட்சைக்கூட ஒருதினப்
போட்டி போல ஆடும் சேவாக், நேற்று ஒருதினப் போட்டியை 20 ஓவர்
கிரிக்கெட் போல ஆடி வானவேடிக்கை  நடத்திவிட்டார். நேற்றைய
போட்டியை லைவ்வாக பார்த்தவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.சேவாக்
25 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடித்ததை ரசிகர்கள் மட்டுமல்ல,
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களும்  வேடிக்கை மட்டுமே  பார்க்க
முடிந்தது.எதையும் தடுக்க முடியவில்லை.
Virender Sehwag celebrates his record-breaking double-hundred

சச்சின் 147 பந்துகளில் 200 அடித்தாரென்றால்,சேவாக் 140 பந்துகளில் 200
அடித்து சாதனையை மாற்றி எழுதியுள்ளார்.ஒரு இந்தியனின் சாதனையை
ஒரு இந்தியனே  உடைத்ததை  நினைத்து, ஒரு இந்தியனாய்  பெருமை
கொள்கிறேன்,கர்வம் கொள்கிறேன்.சச்சின் 200 அடித்தது குவாலியரில்.
சேவாக் 219 அடித்தது இந்தூரில்.இரண்டும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள
மைதானங்கள்.இந்த ஒற்றுமையில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே
தோன்றுகிறது. ஏனெனில்  சேவாக்,சச்சினை குருவாக மதிப்பவர். குரு
வழியில்  சென்றே சாதனை   படைத்திருக்கிறார். இதேபோல்  இன்னும்  நிறைய சாதனைகளை குருவும்,சிஷ்யனும்  படைக்க வேண்டும் என்பதே 
என் போன்ற ரசிகர்களின் ஆசை,கனவு எல்லாம்.            

Sunday, December 4, 2011

பார்த்ததில் பிடித்தது



ஜெயா டிவி-யில் விசுவின் " மக்கள் அரங்கம் " பார்த்தேன். அதில் இரண்டு
நிகழ்ச்சிகள் என்னை நெகிழவும்,மகிழவும் வைத்தது.

ஒன்று - பெங்களூரில் இருக்கும் "உன்னத்தி ( UNNATI )" என்ற தொண்டு
அமைப்பு. இது  வறுமைக்கோட்டில் வாழும் ஏழைகளுக்கு ஒன்பது 
வகையான வேலைவாய்ப்பு பயிற்சிகளை முற்றிலும் இலவசமாக
வழங்கி, தக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் வாங்கித் தருகிறது .
வெளியூர்காரர்களாக இருந்தால் உணவு ,இருப்பிடம் ஆகியவற்றையும்
இலவசமாக தருகிறது.எல்லா ட்ரெய்னிங் கோர்ஸ்களும் 70 நாட்கள்
தான்.இதில் பயன் பெற்றவர்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியது.LKG,UKG
போன்றவற்றிற்கே லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டிய இந்த
காலத்தில் 'உன்னத்தி' செய்யும் தொண்டு உன்னதமானது.அது இருக்கும்
திசைநோக்கி கைகூப்பி வணங்கினாலும் தவறில்லை.

உன்னத்தி மூலம் பயன்பெற விரும்புபவர்கள்
http://unnatiblr.org
போய் பாருங்கள்.

இரண்டாவது - 90 வயது பெண்மணி நடத்தும் அனாதைஇல்லம்.அந்தப்
பெண்மணியின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் நல்லவேலையில்
இருக்கிறார்கள்.அவர் நினைத்திருந்தால் ஏதாவது ஒரு மகனோடு வெளி
நாட்டில் செட்டிலாகி இருக்கலாம்.ஆனால்,அவர் 60 அனாதைக் குழந்தை
களையும்,கொஞ்சம் முதியவர்களையும் அன்போடு அரவணைத்து பாது
காத்து  வருகிறார் . 90 வயதிலும்  தளராத  நம்பிக்கையோடு  சேவை
செய்யும் அந்தப் பெண்மணியை நினைக்கும்போது மனிதநேயம் அறவே
அழிந்துவிடவில்லை.அது இந்தமாதிரி மனிதர்களால் இன்னும் சாகாமல்
தான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. விசு சார் படம் எடுத்த
காலத்தில் பெற்ற பேர்,புகழைவிட"அரட்டை அரங்கம் " "மக்கள் அரங்கம் "
மூலம் செய்த,செய்யும் சமூகத்தொண்டால் கிடைக்கும் பேர், புகழ்
புனிதமானது, ஆத்மார்த்தமானது.வளரட்டும் அவர் சமூகத்தொண்டு.