Wednesday, February 29, 2012

கிரிக்கெட் ( INDIA V SRILANKA )



Virat Kohli celebrates his ninth ODI ton, India v Sri Lanka, CB series, Hobart, February 28, 2012

தோல்வித் தழும்புகளை உடலெங்கும் வாங்கியிருந்த இந்தியஅணி
இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷத்தோடு ஆடியது.
தில்ஷனும் ( 160 ),சங்கக்காராவும்(105 )அடித்தஅடியில் ஒட்டுமொத்த
இந்திய அணியும் மிரண்டுபோனது. 321 ரன்களை எடுப்பதே சிரமம்.
அதுவும் 40  ஓவருக்குள்ளாக எடுத்தால்தான் போனஸ் பாயின்ட்டோடு
இறுதிப்போட்டிக்கு  முன்னேறுவதைப் பற்றி  நினைக்கலாம்  என்ற
சூழ்நிலையில் தான் இந்தியஅணி பேட்  செய்ய ஆரம்பித்தது. இது
கொஞ்சம்கூட சாத்தியம் இல்லாத ஒன்று என்றுதான் என்னைப் போல்
பலரும் நினைத்திருப்பார்கள்.ஆனால்,ஹோபார்ட் மைதானத்தில் மேஜிக்
நிகழ்ந்தது. சச்சினும்,சேவாக்கும் அதிரடி துவக்கம்தர, அதைவைத்து
கம்பீரும், கோஹ்லியும் ராஜபாட்டை போட்டனர். ஒருகட்டத்தில்
கோஹ்லியின் ஆட்டத்தில் ' தானே ' புயல் வேகம் தெரிய 37  ஓவர் 
முடிவதற்குள் இந்தியஅணி சாதனை வெற்றி பெற்றது.கோஹ்லி 86 
பந்துகளில் 133 ரன்கள் அடித்து இலங்கை அணியினரை மிரள வைத்தார்,
இந்திய ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.ஆனாலும்,சின்னதாய் ஒரு 
வருத்தம் இருக்கத்தான் செய்தது.அதிக கூட்டமில்லாத ஸ்டேடியத்தில் 
கை தட்டக்கூட ஆளில்லை என்பதுதான் அது. நேற்று  நாம்  வெற்றி
பெற்றாலும் முழுகிணறு தாண்டியதாக அர்த்தம் இல்லை.வெள்ளியன்று
நடக்கப்போகும்  ஆஸ்திரேலியா,இலங்கை மேட்ச்சை வைத்துத் தான்
நாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோமா என்று தெரியும்.கடைசிவரை 
டென்ஷனோடு இருப்பது நமக்கும் புதிதல்ல, நம் இந்திய அணிக்கும்
புதிதல்ல. காத்திருப்போம் நகக்கடிப்போடு.                      

Monday, January 30, 2012

அஹிம்சை அரசர் காந்தி


ஜனவரி-30 , அஹிம்சையை கொன்றதினம் என்பதா? இந்தியாவுக்கு தீராத
துக்கதினம் என்பதா?ஒவ்வொரு வருடமும் காந்தியடிகளின் இறந்தநாள்
இப்படித்தான் கேள்வியோடு தொடங்கி கேள்வியோடு முடிகிறது எனக்கு.
காந்தி- மனிதரில் ஒரு கடவுள். கடவுளில் ஒரு மனிதர்.     

நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்  என்பது மட்டும் அவர் வரலாறு 
இல்லை.தனிமனித ஒழுக்கம்,பொறுமை,சகிப்புத்தன்மை இதெல்லாம்தான் 
அவரை மகாத்மா ஆக்கிய மகத்தான சக்திகள். நாம் அவசியம் பின்பற்ற
வேண்டிய குணங்களும்கூட.காந்தி தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி
தன் வாரிசுகளுக்கு சுதந்திர இந்தியாவில் எவ்வித பதவியையும் வாங்கித் 
தரவில்லை.சொல்லப்போனால் அவர்களைப்பற்றி நமக்கு பெரிதாக எதுவும்
தெரியாது. ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள்
வாரிசுகளை வளர்த்து உயர்பதவிகளில் அமரவைத்து அழகுபார்ப்பதோடு
கோடி,கோடியாய் கொள்ளையடித்து நாட்டையும் சுரண்டிக் கொண்டிருக் 
கின்றனர்.

இந்தியாவில் தான் காந்தியக் கொள்கைகள் மதிப்பிழந்து போய்விட்டன.
ஆனால், உலகநாடுகள் எல்லாம் காந்தியின் அஹிம்சை வழிதான் 
இன்றைக்குத் தேவை என்று ஒருமித்த குரலில் சொல்வதுதான் அந்த 
மகாத்மாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. காந்திவழி நடப்போம்.
தீவிரவாத, மதவாத கலாச்சாரங்களை ஒழிப்போம். அதுதான் அந்த 
தேசப்பிதாவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.