Tuesday, April 19, 2011

ஒரு சினிமா,ஒரு ரசிகன் (சிறுகதை)

அந்த மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டரில் ஏகக் கூட்டம். எங்கு பார்த்தாலும் ரசிக 
மன்றக் கொடிகளும் ,தோரணங்களும், கட் அவுட்களுமாக காட்சியளித்தன .   
தொடர்ந்து சூப்பர் ஹிட்  படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சூப்பர்
ஹீரோ நரேன்கௌதமின் புதுப்படம் ஒன்று அன்றுதான் ரிலீஸ் .ப்ளாக்கில் 
விற்கும் டிக்கெட்களை வாங்க கூட்டம் அலைமோதியது .

நரேன்கௌதமின் தீவிர ரசிகனான சுனில், ப்ளாக்கில் டிக்கெட் விற்கும் 
பையனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான்.

" இருநூறு ரூபாய்ன்னு ஒரு டிக்கெட் கொடுப்பா ! "

"இல்லீங்க ஒரே ரேட் முன்னூறு ரூபா "  

"நூத்தம்பது  ரூபா டிக்கெட்டுக்கு முன்னூறு ரூபா கேக்குறது  ரொம்ப
அதிகம்பா ."

"அதிகம்தான். இருந்தாலும் முதல் நாள் ,முதல் ஷோ பாக்கணும்னு 
நெனைக்கிறப்ப  கணக்கு பாக்க கூடாது ."

"இருநூத்தம்பதுன்னாச்சும் போட்டு ஒருடிக்கெட் குடுப்பா "என்று சுனில் 
பேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே ,

நாற்பத்தைந்து  வயது மதிக்கத்தக்க ஒருவர் , "டிக்கெட் ஒண்ணு 
வேணும்ப்பா " என்றார்  பையனிடம் .

"முன்னூறு ரூபா ஆகும் சார். பரவாயில்லியா ? "என்று பையன் சொல்ல,

கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு ,டிக்கெட்டோடு தியேட்டருக்குள்
நுழைந்தார் நாற்பத்தைந்து வயது பரந்தாமன் .

"போறவருக்கு நாப்பத்தஞ்சி வயசிருக்கும். இந்த வயசுலயும் ,நரேன்
கௌதமுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கிறதாலதான் ,எங்களோட ப்ளாக்
டிக்கெட் வியாபாரம் ஓஹோன்னு நடக்குது "என்று பையன் பெருமை
பீற்றிக்கொள்ள இனி பேரம் பேசுவதில் பிரயோஜனம் இல்லை என்று
முன்னூறு ரூபாய் கொடுத்து ,டிக்கெட் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள்
நுழைந்தான் சுனில் .                                                                                               

இடம் பார்த்து அமர்ந்த  சுனில், பக்கத்து சீட்டைப் பார்த்தான்,பக்கத்து சீட்டில்
அதே  நாற்பத்தைந்து வயது பரந்தாமன் .

சுனிலுக்கு அந்த ஆள் மீது எரிச்சலாக இருந்தது ."என் அப்பா வயதிருக்கும்
இவருக்கு,இந்த வயதில் கல்லூரி மாணவர்கள் ,இளைஞர்களைப் போல
முதல் நாள் ,முதல் ஷோ பார்க்க ஆசைப்படுகிறாரே ! எங்களுக்குத்தான்
இந்த வயதில் குடும்பம் ,பொறுப்பு என்று பெரிதாக எதுவுமில்லை.இவர்
எப்படி இப்படி பொறுப்பில்லாமல் சினிமாவுக்காக அலைகிறார்? என்று
யோசித்துக் கொண்டிருக்கும்போதே, படம் போடப்பட்டுவிட ,சினிமாவோடு
ஒன்றினான்.

நேரம் போனதே தெரியாமல், இடைவேளை வந்தது.அந்தளவு படம் செம
விறுவிறுப்பாக இருந்தது.


சுனில் தியேட்டருக்குள் இருந்த ஸ்டாலில் ஐஸ்கிரீம் ஒன்றோடு,சிகரெட்
ஒன்றையும் நாசமாக்கிவிட்டு, இருக்கைக்கு வந்தான் . பக்கத்து சீட்
பரந்தாமன் எந்தவித உற்சாகமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தார்.

"இந்த ஆள் நரேன்கௌதமின் ரசிகன் மாதிரியே தெரியவில்லை .பாடல்
காட்சியோ ,சண்டைக் காட்சியோ ,காமெடிக் காட்சியோ வந்தபோதுகூட
எந்தவித ஆரவாரமும் காட்டவில்லை .பின்... எதற்காக முன்னூறு ரூபாய்
செலவு செய்து முதல் நாள், முதல் காட்சி பார்க்க வர வேண்டும் ?"
குழம்பிப் போனான் சுனில் .

இடைவேளைக்குப் பின் படம் இன்னும் விறுவிறுப்பானது.ஆனால்,
படத்தின் முடிவுதான் யாரும் எதிர்பாராதது .ஹீரோ நரேன்கௌதம் இறந்து
விடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது .

ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தமாய் இருந்தாலும் ,கதைக்கு அந்த
கிளைமாக்ஸ்தான்  மிகப் பொருத்தம் என்பதால் ,மனதை தேற்றிக் கொண்டு
வெளியேறத் தொடங்கினர் .

சுனில் வெளியேற எத்தனித்தபோது பக்கத்து சீட் பரந்தாமன் கதறி அழுது
கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப் போனான் .

படத்தில்  நரேன்கௌதம் இறந்ததற்கே இப்படி அழுகிறாரே!...இவரல்லவா
தீவிர  ரசிகன் .இவரைப் போய் சந்தேகப்பட்டேனே ! தோரணம் கட்டிய ,
ப்ளெக்ஸ் போர்டு வைத்த வெறித்தனமான ரசிகர்கள்கூட ,ஏன் நான்கூட
இப்படி அழவில்லையே !அழட்டும்,மனப்பாரம் குறையும்வரை அழட்டும் '
என்று மௌனமாய்  தியேட்டரைவிட்டு வெளியேறினான் சுனில் .

கதைக்கு அவசியமான டெயில் பீஸ் :                   

பரந்தாமன் நடிகனாக வேண்டும் என்ற வெறியில் சென்னைக்கு வந்து
இருபது வருடங்களாகிறது .இந்த இருபது வருடத்தில் அவர் பார்க்காத
தயாரிப்பாளர்களும் இல்லை ,டைரக்டர்களும் இல்லை,ஏறி இறங்காத
சினிமாக் கம்பெனிகளும் இல்லை.அதிர்ஷ்டவசமாய் நரேன்கௌதமின்
இந்த புதுப்படத்தில் இரண்டு ,மூன்று சீன்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க,
சந்தோஷமாய் நடித்தார் .அந்தக் காட்சிகளை பார்க்கவே ப்ளாக்கில்
முன்னூறு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு ஆவலோடு வந்தார்
தியேட்டருக்கு .ஆனால் ...படத்தின் நீளம் கருதி ,அவர் நடித்த காட்சிகள்
வெட்டி எறியப்பட்டிருக்க ,அந்த துக்கம் தாளாமல் தான் கதறி அழுதார்
என்பது , பாவம் சுனிலுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.    
  
   


Saturday, April 16, 2011

தேர்தல் - 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில்
தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.முடிவுகளை தெரிந்து கொள்ளத்தான் நீண்ண்ண்...ட நாட்கள்  காத்திருக்க வேண்டி   
இருக்கிறது.    மரண அவஸ்தை என்பார்களே அதைத்  
தான்  எல்லா அரசியல்வாதிகளும் இப்போது அனுபவித்துக் 
கொண்டிருப்பார்கள் . ஒவ்வொரு முறையும் தேர்தல் கமிஷன் 
ஆரம்பத்தில்  கெடுபிடியாய் இருப்பதும் , கடைசி கட்டத்தில் அவர்கள் 
கண்ணில் மண்ணை தூவி விட்டு அரசியல்வாதிகள் பணத்தால் தீர்ப்பை 
விலைக்கு வாங்குவதும்  நடந்து கொண்டே இருக்கிறது . இன்றைக்கு 
தேர்தலில் நிற்க நல்லவன் என்ற தகுதியெல்லாம் மலையேறி போயாச்சு.
பணபலம் படைத்தவனாக , பாவ செயல்களுக்கு அஞ்சாதவனாக இருந்தால்
மட்டுமே சீட் வழங்கப்படுகிறது .இவர்கள் ஜெயித்தால் நாட்டுக்கு நல்லது
தான் செய்வார்களா ? செய்யத்தான் விடுவார்களா ? 

   
Picture Of Indian Flag, India Flag, Indian Flag, National Flag of India, Flag of India Picture, Indian Flag Picture, Indian National Flag, About India Flag

காமராஜர் போல, கக்கன் போல, அண்ணாதுரை போல யாராவது ஒரு நல்ல தலைவன் வந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற 
மாட்டானா ? என்ற ஏக்கம் எல்லோரைப் போல எனக்கும் உண்டு .அதுவரை 

      "சொல்லடி பாரத மாதா - நீ 
       சுதந்திரம் பெற்றது  தீதா "

என்றே புலம்பத் தோன்றுகிறது. 

Monday, April 4, 2011

கிரிக்கெட்

இந்தியாவின்  28 வருட காத்திருப்பு .சச்சினின் 21 வருட கனவு நிறைவேறிய
நாள் ஏப்ரல் 2 .உலகக் கோப்பையை வென்று இந்தியர்கள் அனைவரையும்
ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளனர் நம் வீரர்கள்.மேற்கு இந்திய தீவுகள்,
பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,ஸ்ரீலங்கா என்று நான்கு முன்னாள் சாம்பியன்
களை வரிசையாக வென்று சாம்பியன்களின் சாம்ப்பியனாக திகழ்கிறது
இந்தியா.ஆரம்பத்திலே சேவாக், சச்சின் வெளியேற அதிர்ந்து போனது 
ஒட்டு மொத்த இந்தியாவும்.ஆனால், பின்னால் வந்த கம்பீரும்,டோனியும் 
சிறப்பாய் ஆட சரிவிலிருந்து மீண்ட இந்தியா கோப்பையையும் வென்றது. 
வீரர்கள் அனைவரும் பரிசு மழையிலும்,பாராட்டு மழையிலும் நனைந்தார்கள் .நனைகிறார்கள் .நனைவார்கள் .
 tamil cricket news-ICC Cricet World Cup 2010
ஆனாலும்,சின்ன வருத்தம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும், அது
வீரர்களுக்கு கொடுப்பதாக சொன்ன ஒரு கோடிரூபாய் மீதும். உலகின்
நெம்பர் 1 பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்தியா மூன்று கோடியோ,
அஞ்சு கோடியோ ஒவ்வொருவருக்கும் அறிவித்திருக்கலாம் .ஏனென்றால்
அவர்களை  வைத்துதானே கிரிக்கெட் வாரியம்  கோடிகளை குவித்துக்
கொண்டிருக்கிறது .மற்றபடி எல்லோரும்  எதிர்பார்த்ததைப் போல இந்தியா
உலகக் கோப்பையை வென்றது அடுத்து ஒருமுறை இந்தியா வெல்லும்வரை எல்லார்  மனதிலும்  பசுமையாய்  நிற்கும் ...நிற்கும் ...
நிற்கும்.