Monday, January 30, 2012

அஹிம்சை அரசர் காந்தி


ஜனவரி-30 , அஹிம்சையை கொன்றதினம் என்பதா? இந்தியாவுக்கு தீராத
துக்கதினம் என்பதா?ஒவ்வொரு வருடமும் காந்தியடிகளின் இறந்தநாள்
இப்படித்தான் கேள்வியோடு தொடங்கி கேள்வியோடு முடிகிறது எனக்கு.
காந்தி- மனிதரில் ஒரு கடவுள். கடவுளில் ஒரு மனிதர்.     

நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்  என்பது மட்டும் அவர் வரலாறு 
இல்லை.தனிமனித ஒழுக்கம்,பொறுமை,சகிப்புத்தன்மை இதெல்லாம்தான் 
அவரை மகாத்மா ஆக்கிய மகத்தான சக்திகள். நாம் அவசியம் பின்பற்ற
வேண்டிய குணங்களும்கூட.காந்தி தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி
தன் வாரிசுகளுக்கு சுதந்திர இந்தியாவில் எவ்வித பதவியையும் வாங்கித் 
தரவில்லை.சொல்லப்போனால் அவர்களைப்பற்றி நமக்கு பெரிதாக எதுவும்
தெரியாது. ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள்
வாரிசுகளை வளர்த்து உயர்பதவிகளில் அமரவைத்து அழகுபார்ப்பதோடு
கோடி,கோடியாய் கொள்ளையடித்து நாட்டையும் சுரண்டிக் கொண்டிருக் 
கின்றனர்.

இந்தியாவில் தான் காந்தியக் கொள்கைகள் மதிப்பிழந்து போய்விட்டன.
ஆனால், உலகநாடுகள் எல்லாம் காந்தியின் அஹிம்சை வழிதான் 
இன்றைக்குத் தேவை என்று ஒருமித்த குரலில் சொல்வதுதான் அந்த 
மகாத்மாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. காந்திவழி நடப்போம்.
தீவிரவாத, மதவாத கலாச்சாரங்களை ஒழிப்போம். அதுதான் அந்த 
தேசப்பிதாவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.