Monday, October 31, 2011

2011 -ல் ஓர் பர்த்டே (சிறுகதை)

செல்போன் இடைவிடாமல் சிணுங்க,எரிச்சலோடு எடுத்த அஸ்வின்,"நான் 
ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்.உனக்கு போன் பண்ண நேரம் 
காலமே கிடையாதா ஸ்வேதா?"என்றான்.

"ஆறு மாசத்துலயே புதுப்பொண்டாட்டி நான் உனக்கு கசந்துட்டேனா!இவ்வளவு சலிப்பா பேசுறே!"

"ஸாரி ஸ்வேதா.என்ன விஷயம்,பட்னு சொல்லு?"

"நாளைக்கு என் பர்த்டே.ஒருநாள் லீவ் போட்டு வர்றியா! கோயில், பீச்           
மாயாஜால்னு என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.ஒரு மாசமா இன்டர்நெட்,
SMS, போன்னு பேசிப்பேசி போரடிக்குது அஸ்வின். உன்னை ஒருமுறை 
நேர்ல பார்க்க  ஆசையா இருக்கு."

"லீவா!அது ரொம்ப கஷ்டம் ஸ்வேதா.யு எஸ் ப்ராஜெக்ட் ஒண்ணு இன்னும் 
ஒருவாரத்துல முடிக்கவேண்டி இருக்கு.அதுக்காக ராத்திரி பகல்னு பாக்காம
உழைச்சிகிட்டிருக்கோம்.டீம்லீடரா இருந்துகிட்டு நானே பொறுப்பில்லாம
நடந்துக்க முடியுமா?"என்று அஸ்வின் சொல்ல,கோபத்தில் போனை கட்
செய்தாள் ஸ்வேதா.

இரவு பனிரெண்டு மணிக்கு காலிங்பெல் அழைக்க, ஸ்வேதா கதவைத்
திறக்க வெளியே நின்றிருந்த அஸ்வின்,"ஹேப்பி பர்த்டே மை டார்லிங்"
என்றவன் கையிலிருந்த சின்ன கிஃப்ட்டை கொடுத்துவிட்டு," ஸாரிடா
ஸ்வேதா குட்டி அடுத்த பிறந்தநாளை க்ராண்டா கொண்டாடலாம்.நான் 
திரும்ப ஆஃபீஸ் போயாகணும்"என்று கிளம்ப ,

"என்ன லைஃப் இது அஸ்வின்?ஒரே வீட்ல இருந்தும் ஒரு மாசமா ரெண்டு  
பேரும் பாத்துக்கமுடியல!நீ என்னடான்னா   உன் கம்பெனி,ப்ராஜெக்ட்,
வெளிநாடுன்னு ஓடறே.நான் கால்சென்டரை கட்டிண்டு அழறேன்.இன்னும்
கொஞ்சநாள்ல ஒரே  வீட்ல இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க
பாஸ்போர்ட் ,விசா எல்லாம்கூட தேவைப்படுமோ என்னவோ !"என்று
ஸ்வேதா ஆதங்கப்பட ,அதிலிருந்த உண்மை ஓங்கி சம்மட்டியால் அடித்தது 
போல சுள்ளென்று வலித்தது அஸ்வினுக்கு .     

                          

Saturday, October 29, 2011

நல்லதை விதை ! (சிறுகதை)

வீட்டுக்குள் நுழைந்த கீதா கணவன் இளமாறனிடம்,"நம்ம பையன் பண்ணின காரியத்தால இன்னிக்கு எம் மானமே போச்சுங்க!"என்று புலம்பினாள்.

"அப்படி என்ன செஞ்சான்?" என்று இளமாறன் கேட்க,

"சென்னையில இருந்து சேலத்துக்கு பஸ்ல வந்துகிட்டிருந்தோம்.கண்டக்டர்
நம்ம பையனுக்கு முழுடிக்கெட் எடுக்கணும்னு சொன்னாரு.இவனுக்கு
12 வயசுதான் ஆகுது.அதனால அரைடிக்கெட் கொடுங்கன்னு கேட்டேன்.
அதுக்குள்ளே இவன் முந்திகிட்டு எனக்கு 13வயசு ஆகுதுன்னு சொல்ல
கண்டக்டர் உட்பட எல்லாரும் என்னை ஒருமாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க
அப்புறம் வேற வழியில்லாம முழுடிக்கெட் எடுத்ததுல 150 ரூபா தெண்டம்.
இவனை கொஞ்சம் கண்டியுங்க " என்று கீதா கூற,

"அம்மா சொல்றதெல்லாம் நிஜமாப்பா?"பையனிடம் இளமாறன் கேட்க,

"ஆமாம்பா,நீங்கதானே பொய் சொல்லக்கூடாது,எப்பவும் உண்மையே
பேசணும்னு சொல்வீங்க.அதத்தான் இன்னிக்கு செஞ்சேன்.நா செஞ்சது
தப்பாப்பா?"என்றான்.

"இல்லப்பா,நீ செஞ்சதுதான் ரொம்பச் சரி.கீப் இட் அப்"என்று மகன்
முதுகில் தட்டிக்கொடுக்க ,

"என்னங்க நீங்க ,அவனை கண்டிப்பீங்கன்னு பாத்தா  முதுகுல தட்டிக்
கொடுக்குறீங்களே!"கீதா கோபிக்க ,

"தப்பு கீதா, தப்பு.இன்னிக்கு இந்த 150  ரூபாய்க்காக அவனை பொய்
சொல்லச் சொன்னா,நமக்கு ஆதாயம் கிடைக்கும்னா பொய் சொல்றது
தப்பில்லைங்கிற எண்ணம் அவன் அடிமனசுல ஆழமா பதிஞ்சுடும்.
இந்த லாபம் பாக்குற புத்திதான் பின்னால லஞ்சம்,ஊழல்கூட 
தனக்காக செஞ்சா தப்பில்லைன்னு நினைக்க வைக்கும்.இந்த வயசுல 
அவன் மனசுங்கறது சீர்படுத்தப்பட்ட அழகான விளைநிலம் மாதிரி.இதுல
நல்லத விதைச்சோம்னா,நல்லதையே அறுவடை செய்யலாம்.அதனால 
தான் அவனை தட்டிக் கொடுத்தேன்"என்று சொன்ன கணவனை 
காதலோடு கட்டிக்கொண்டாள் கீதா.