Tuesday, November 29, 2011

கிரிக்கெட் ( IND v WI )


Sachin Tendulkar was dismissed for 3

மும்பை கிரிக்கெட் டெஸ்ட்  இறுதி ஓவர் வரை மட்டுமல்ல, இறுதி
பால்வரை பரபரப்பாய் நடந்து முடிந்திருக்கிறது.கைக்கெட்டிய தூரத்தில்
வெற்றி இருந்தும் அதை கோட்டைவிட்டது நம் இந்திய அணி.கொஞ்சம்
திமிர்,கொஞ்சம் அலட்சியம் எல்லாம் தான் இதற்குக் காரணம் என்று நான்
நினைக்கிறேன். சேவாக் ஆரம்பித்து கொடுத்த நல்ல தொடக்கத்தை
பயன்படுத்தி பத்துஓவர் மிச்சம் இருக்கும்போதே முடித்திருக்கவேண்டிய
மேட்சை வீணடித்துவிட்டார்கள் மிடில்வரிசை ஆட்டக்காரர்கள். 3-0
என்று தொடரை வென்று இருந்தால் ஐசிசி தர வரிசையில் முன்னேற
இன்னும் கொஞ்சம் அதிக புள்ளிகள் கிடைத்திருக்கும்.இப்போது அதுவும்
போச்சு.மற்றபடி எதிர்பார்த்த சச்சின் சதம் அடிக்காமல் எதிர்பாராத
அஸ்வின் சதமடித்து அசத்தினார்.90-களின் துரதிஷ்டம் துரத்த சச்சின்
மீண்டும் 94-ல் அவுட்.மும்பை ரசிகர்களின் இதயமும் அதோடு அவுட்.
இனி அவர் செஞ்சுரி அடிக்க ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வரை
காத்திருக்கத்தான் வேண்டும் ,வேறு வழியில்லை.          



Thursday, November 24, 2011

எட்டாவது அதிசயம்! (சிறுகதை)


அது கேசவன் தானே!ஏன் என்னைப் பார்த்து அந்த சலூனுக்குள் ஒளிகிறான்? வியப்பாக இருந்தது எனக்கு.

நான் கொஞ்சம் லொட,லொடவென்று பேசும் டைப். அதற்குப் பயந்து ஒளிகிறானா?அல்லது LIC பாலிசி போடச் சொல்லி ரொம்ப நாட்களாக
வற்புறுத்தி வருகிறேன். அதற்குப் பயந்து பதுங்குகிறானா? அவனிடமே
கேட்டு விடுவது என்ற முடிவோடு போனேன்.

"ஏன்டா  என்னைப் பாத்து  ஒளியறே? பாலிசிக்குப் பயந்தா?" என்றேன்
காட்டமாய்.

"அடப்பாவி , நான் ஒளிஞ்சது  வேற  ஒரு  காரணத்துக்காகடா. உனக்குப்
பக்கத்துல நின்னுகிட்டிருந்தவர் என்னோட பழைய முதலாளிடா.அவருக்கு
தொழில்ல பெருத்த நஷ்டம். அங்க வேலை பாத்த தொழிலாளிகளுக்கு
 ரெண்டுமாதச் சம்பளபாக்கி இருக்கு என்னையும் சேத்து.ஒரு மாசம்
முன்ன அவரைப் பாத்தப்ப,சம்பள பாக்கிக்காக தொழிலாளிகளைப் பாத்தா
ஓடி ஒளிஞ்சுக்க வேண்டி இருக்கு. ரொம்ப கொடுமைப்பா இதெல்லாம்னு
வருத்தப்பட்டுச்  சொன்னார். இந்தமுறை அவரு என்னைப்பாத்து
ஒளியிறதுக்குள்ள நானா ஒளிஞ்சுக்கிட்டேன் .என்னால அவருக்கு
செய்ய முடிஞ்ச உதவி இதான்"என்றான் கேசவன்.

கேசவன் எட்டாவது அதிசயமாய் எனக்குத் தெரிந்தான் இப்போது.


(குமுதம் இதழில் வந்த சிறுகதை இது.)
     

Tuesday, November 22, 2011

பிடிச்சிருக்கா? (சிறுகதை)


"நட்சத்திரா...நட்சத்திரா..."என்று என்னைக் கூப்பிட்டுக்கொண்டே அப்பா,
அம்மா இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

"என்னப்பா ?" என்று நான் கேட்க,

"அடுத்த வாரம் நடக்கப்போற உன் கல்யாணத்துக்காகப் பட்டுப்புடவை,
நகைகள் எல்லாம் வாங்கி வந்துருக்கோம்.பாத்து சொல்லுமா எப்படி
இருக்குன்னு?"

"நட்சத்திரா,உனக்குப் பிடிச்ச மெரூன்கலர்லயே பட்டுப்புடவை எடுத்து
வந்திருக்கோம்.விலை ஒருலட்ச ரூபா. பிடிச்சிருக்கா?"

"இந்த வைர நெக்லஸை பாரும்மா.லேட்டஸ்ட் டிசைனாம்.உனக்குன்னே
செஞ்ச மாதிரி இருக்கு."

"இது புது மாடல் லேடீஸ் வாட்ச்.இருபதாயிரம் ரூபா.பிடிச்சிருக்காம்மா?"

"இது நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த தங்க கொலுசு.பிடிச்சிருக்கா பாரு.
இல்லேன்னா மாத்திக்கலாம்."

"இப்படிப் பிடிச்சிருக்கா,பிடிச்சிருக்கா என்று கேட்ட அப்பா,அம்மா பதினேழு
வயசு வித்தியாசமுள்ள மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க உனக்குப்
 பிடிச்சிருக்கா?  என்று  மட்டும்  கடைசிவரை  என்னிடம் கேட்கவே
இல்லை.


(குமுதம் இதழில் முத்திரைக் கதை அந்தஸ்த்தோடு வந்தது இது.)         

Wednesday, November 16, 2011

பெட்ரோல் அரசியல்!


பெட்ரோல் விலைகுறைப்பு பொதுமக்களுக்கு சந்தோஷம் தரும்
விஷயம் என்றாலும்,அதன் பின்னால் இருக்கும் அரசியலை கூர்ந்து
நோக்கினால் தான் தெரியும்.இந்த விலைகுறைப்பு மம்தாபானர்ஜியின்
மிரட்டலுக்குப் பயந்தா?அல்லது,  நான்கைந்து  மாதத்தில்  வரப்போகும்
உத்திரப்பிரதேச தேர்தலை மனதில் வைத்தா என்பது மன்மோகன் அரசுக்கே
வெளிச்சம். இவர்களின்அரசியல் ஆட்டத்துக்கு மக்களை பகடை காய்களாக
பயன்படுத்துவது  எந்தவிதத்தில்  நியாயம் ? மக்கள்  அத்தியாவசியப்
பொருட்களை வாங்கும் சக்தியை மட்டுமல்ல,இதையெல்லாம் எதிர்த்து
போராடும் சக்தியையும் இழந்து விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை.
நம்முடைய இந்த மனோபாவம் தான் அரசியல்வாதிகளுக்கு எதையும்
செய்யும் துணிச்சலை கொடுக்கிறது.போராட்டகளம் தயாராய்த் தான்
இருக்கிறது.போராடத்தான் மக்கள் இல்லை!         

Monday, November 14, 2011

சுதந்திர வலி! (சிறுகதை)


அன்று சுதந்திர தினம்.அந்த பள்ளிக்கூடத்தின் தேசியக்கொடியை ஏற்றி
வைக்க சிறப்பு விருந்தினராக அந்த பகுதியைச் சேர்ந்த பெண் விடுதலைப்
போராட்ட தியாகி ஈஸ்வரியை அழைத்திருந்தனர்.கொடியை ஏற்றி வைத்து
விட்டு பேச ஆரம்பித்தார் ஈஸ்வரி.

"நம்மநாடு  சுதந்திரமடைஞ்சு 65 வருஷம்  ஆகுது . இந்த 65 வருஷத்துல
நாம அறிவியல்,மருத்துவம்,தொலைத்தொடர்பு துறைன்னு பல துறையில
முன்னேறி இருக்கோம்.ரொம்ப பெருமையாத் தான் இருக்கு.ஆனா,இந்த
நாட்டு  விடுதலைக்காக  பாடுபட்ட  தியாகிகளோட  வாழ்க்கை  எப்படி
இருக்குன்னு பாத்தா கொஞ்சம் அவலமாத்தான் இருக்கு.என்னையே
எடுத்துக்கோங்க,நா நேதாஜியோட இந்திய தேசிய ராணுவத்துல
சேந்து,பர்மாவுல நடந்த பயிற்சியில எல்லாம் கலந்துகிட்டு நாட்டோட
விடுதலைக்காக போராடினவ தான்.கல்யாணம்,காட்சியெல்லாம்கூட
வேண்டாம்னுட்டு நிறைய போராட்டத்துல கலந்துகிட்டேன்.நாடும்
விடுதலையாச்சு.அப்புறம், உடம்புல தெம்பு  இருக்கிறவரைக்கும்
உழைச்சு பிழைச்சி வாழ்க்கையை ஓட்டிட்டேன்.இப்ப எனக்கு 88
வயசாகுது. எந்த வேலையும் செய்ய முடியல. பசி வந்திட பத்தும்
பறக்கும்பாங்க.அந்த பசியை வெல்ல தியாகிங்க பென்ஷனுக்கு  மனு
கொடுக்க போனா,"நீ எந்த போராட்டத்துல கலந்துகிட்ட?எத்தனை தடவ
ஜெயிலுக்கு போயிருக்க? அதுக்கெல்லாம் ஆதாரம்  இருக்கான்னு
கேக்குறாங்க! நாட்டுக்காக பாடுபட்ட நா எந்த ஆதாரமும் வச்சுக்கல.
ஆதாரம் இல்லன்னா பென்ஷன் இல்லன்னு சொல்லிட்டாங்க.

நாடு அடிமைப்பட்டு கிடந்தப்ப நாங்க போராடி மீட்டோம். இப்ப நாங்க
வறுமையில அடிபட்டு கிடக்குறப்ப மீட்க வேண்டியது இந்த நாட்டோட
கடமையில்லையா? இந்த கொடி ஏத்துற நிகழ்ச்சியில கலந்துக்ககூட
எங்கிட்ட ஒரு நல்ல புடவை இல்ல.கட்டியிருக்கிற இந்த புடவையை
அவுத்தா ஆயிரம் ஒட்டுகளும்,கிழிசல்களும் தெரியும்"என்று ஈஸ்வரி
கண்கலங்க,பள்ளியில் இருந்தவர்கள் மட்டுமல்ல,கம்பீரமாய் பறந்து
கொண்டிருந்த  தேசியக்கொடியும்  தலைகவிழ்ந்து  தன்  துக்கத்தை
வெளிப்படுத்தியது.  

  
                            
       

Friday, November 11, 2011

சினிமாக்காரன் கனவு ! (சிறுகதை)


சினிமா இயக்குனர் சுதந்திரராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்ட
செய்திகேட்டு அவரை பேட்டிகாண பத்திரிக்கை நிருபர் கூட்டம் அவரின்
அலுவலகத்தை மொய்த்தது.

சுதந்திரராஜாவை நோக்கி சரமாரியாய்  கேள்விக்கணைகளை  வீசவும்
ஆரம்பித்தனர்.

"தேசிய விருதுக்கான இயக்குனரா உங்களை தேர்ந்தெடுக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டபோது, எப்படி இருந்தது உங்க மனநிலை?"

"எல்லார் மாதிரியும் பரவசப்பட்டேன், சந்தோசப்பட்டேன்."

"உங்களின் முதல் படத்திற்கே தேசியவிருது கிடைத்திருக்கிறது. இதை
எதிர்பார்த்தீர்களா?"

"விருதுக்கான  எல்லா  தகுதிகளும்  என்  படத்திற்கு  இருந்ததாகவே
நினைக்கிறேன்."

"உங்க பேச்சுலதான் சந்தோசம் இருக்கு. ஆனா, உங்க முகத்துல  ஏதோ
வருத்தம்  இருக்கிறமாதிரி  தெரியுது."

"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி.நா இந்த சினிமா ஃபீல்டுக்கு வந்தப்ப
எனக்கு ஒரு கனவு இருந்துச்சு.அது,நாஒரு படம் டைரக்ட் பண்ணனும்,
அது என் கிராமத்து தியேட்டர்ல ஓடணும், எம் மக்களோட அந்தப்
படத்தை நா பார்க்கணும்னு.புதுப்படம் என் கிராமத்துக்கு வர எப்பவும்
கொஞ்சம் லேட்டாகும்.என் படமும் அங்க போடறத்துக்குள்ள, இருந்த
ஒரே  தியேட்டரையும்  நேத்துதான்  இடிச்சாங்களாம். கொஞ்சநாளா
நஷ்டத்துல ஓடினதால  எடுத்த  முடிவாம். அதான்,  விருது  கிடைச்ச
சந்தோசத்தைவிட,தியேட்டர் இடிச்ச துக்கம் என்னை வதைக்குது."என்று
சுதந்திரராஜா  லேசாய்  கண்கலங்க, நிருபர் கூட்டம் அதிர்ச்சியில்
உறைந்தது.

                  

கிரிக்கெட்


இங்கிலாந்தில் பட்ட அவமானக்கறையை துடைக்க மேற்கு இந்தியதீவுகள்
அணியுடனான மோதலை பயன்படுத்திக் கொள்ள  ஆரம்பித்துவிட்டது  நம்
இந்திய அணி. அதன் முதல்கட்டமே, முதல் டெஸ்ட்டின் வெற்றி. அறிமுக
வீரர்  அஸ்வின்  9  விக்கெட்களை  வீழ்த்தி  தன்  தேர்வை  நியாயப்படுத்தி
இருக்கிறார். மேற்கு இந்தியதீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் லீடை
சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறியதே அதன் தோல்விக்குக் காரணம்.
சச்சின் 100வது சதம் அடிக்காமல் வழக்கம்போல ஏமாற்றினார்.இருந்தாலும்
15000 ரன்கள் என்ற சாதனையை படைத்து ஆறுதல்பரிசு அளித்திருக்கிறார்  நம்  எல்லோருக்கும். அடுத்துவரும்  டெஸ்ட்டிலாவது அவர்  வரலாற்று 
சாதனை படைப்பார் என்று நம்புவோம்.     
           

Friday, November 4, 2011

நண்பா ! நண்பா ! (சிறுகதை)


"இப்படி ஒரு மலைக்கிராமத்திலா என் நண்பன் நகுலன் ஆசிரியராக
பணிபுரிகிறான்! பள்ளியில் படிக்கும்போதே ஏதாவது சாதிக்கவேண்டும்,
சாதிக்கவேண்டும்  என்று  சதா  சொல்லிக்கொண்டிருப்பானே ! நவீன 
வசதிகளின் சுவடுகள் கொஞ்சம்கூட இல்லாத இந்த ரிமோட் வில்லேஜில்
இருந்து  கொண்டு  என்ன  பெருசாக சாதித்து விடப்போகிறான்? சராசரி  
வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருப்பான் !என்ற எண்ணத்தோடு அவன் 
வீட்டை நெருங்கினேன்.

வீடு பூட்டியிருக்க ,இன்று ஞாயிற்றுக்கிழமை எங்கே போயிருப்பான்?என்ற 
எண்ணத்தோடு பக்கத்து வீட்டிலிருந்த கிழவியிடம் கேட்க ,"ஊரே ஸ்கூல்ல
தாம்பா இருக்கும், அங்க போய்ப்பாரு "என்றாள்.

நான் ஒன்றும் புரியாமல் ஸ்கூல் நோக்கி நடந்தேன்.கிழவி சொன்னது 
உண்மை தான்.ஊர் மக்கள் எல்லோரும் ஸ்கூலில் கூடியிருக்க ,அங்கே
ஒருவர் மேடையில் மருத்துவம் சம்மந்தமான குறிப்புகள் கொடுத்துக் 
கொண்டிருந்தார் .என்ன இங்கே நடக்கிறது என்பதை நான் முழுசாக 
உணர்வதற்குள் என் தோள் மீது ஒரு கை விழ , திரும்பிப்பார்த்தேன் .
நகுலன் நின்று கொண்டிருந்தான் .

"என்ன நகுலா இதெல்லாம் ?"என்றேன்.

"இது மலையில இருக்கிற  குக்கிராமம்டா .அதனால இங்க சேவை
செய்ய எந்த டாக்டரும் ஆர்வம் காட்டுறதில்ல .அதுக்காக நோய் வராம
இருக்குமா என்ன ?காய்ச்சல் ,தலைவலி ,கைகால் வலி, ரத்தக்காயம்  
இதுக்கெல்லாம் செய்ய வேண்டிய முதலுதவி பத்தி மக்களே தெரிஞ்சுக்
கிட்டா,அவசரத்துக்கு அவுங்களே வைத்தியம் செஞ்சுக்கலாமில்ல.அதுக்குத்
தான் என் டாக்டர் நண்பன் ஒருவரை வரவழைச்சு மருத்துவ விளக்கம்
கொடுக்கச் சொன்னேன்.அதோட ரத்ததானம்,கண்தானம் பத்தியும் 
இந்த மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி அம்பது பேரை கண்தானம் பண்ணவும்
நிறைய பேரை ரத்ததானம் தரவும் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.ஏதோ
நம்மால முடிஞ்சது இந்த சமுதாயத்துக்கு! " என்றான்.

"நகுலா,நீ சாதிச்சுக்கிட்டுதான்டா இருக்கே "மனதுக்குள் சொல்லி,சொல்லி
சந்தோசப்பட்டுக்கொண்டேன். 
                       


   
             

Wednesday, November 2, 2011

தேவையா இது?


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனை
ஆக்குவதென்பது முழுக்க,முழுக்க அரசியல் உள்நோக்கம் உடையது.
முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக
கண்ணை  மூடிக்கொண்டு  எதிர்ப்பது  இன்றைய  ஆட்சியாளர்களுக்கு
நல்லதல்ல.இன்னும் இவர்கள் பக்குவப்படவில்லை என்பதையே இந்த 
செயல் காட்டுகிறது.மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கவா ஆட்சி 
மாற்றத்தை கொண்டு வந்தார்கள் மக்கள் !அவர்கள் எல்லாவற்றையும் 
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேவைப்படும்போது பொங்கி 
எழவும் தயங்கமாட்டார்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் ஞாபகத்தில் 
வைத்துக்கொள்வது நல்லது.            

ஹைக்கூ கவிதைகள்


எரிந்த வீட்டில்    
சந்தோசமாய்  சிலர் 
சிவப்பு விளக்கு !


அழிக்க முற்பட்டாலும் 
வளர்ந்துகொண்டே போகிறது
வறுமைக்கோடு.


ஆங்கிலத்தில் மழை
தமிழில் தூறல் 
கான்வென்ட் பிள்ளைகள்.

ஆகஸ்ட் - 15 , ஜனவரி -26
இரண்டும் அவமானத்தில் 
டிசம்பர்-6 


காலையில் பூக்கள்
மாலையில் காம்புகள்
பள்ளிக் குழந்தைகள் !