Monday, December 19, 2011

ஏழு ஓட்டு ! (சிறுகதை)



திராவிடபாண்டியன் வீட்டின் முன்னால் ஒரே வெடிச்சத்தம். எம்.எல்.ஏ
தேர்தலில் அவர் வெற்றிபெற்ற சந்தோஷத்தைத்  தான் அவரது
ஆதரவாளர்கள் இப்படி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

உள்ளே திராவிடபாண்டியன் தன் தீவிர தொண்டர்களிடம்,"நாம எல்லாரும்
இப்ப அந்த வெற்றிவேலைப் பாத்து நன்றி சொல்லிட்டு வருவோம்"என்றார்.

"யாரு,உங்கள எதிர்த்து போட்டியிட்டு தேர்தல்ல  தோத்துப்போன அந்த
வெற்றிவேலையா பாக்கணும்னு சொல்றீங்க?தலைவரே, உங்களுக்கு
என்னாச்சு?ஏன் இப்டி தப்புத்தப்பா பேசுறீங்க?"என்று ஒருவன் கேட்க,


"நாம எத்தனை வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சோம்கிறது மறந்து
போயிடிச்சா?வெறும் ஏழு வோட்டு வித்தியாசம்டா.தேர்தலுக்கு முன்ன
ஒரு நாள் நம்ம கட்சிக்காரங்க பிரச்சாரத்தை முடிச்சிகிட்டு ராத்திரி
பதினோரு மணிக்குமேல கார்ல வீட்டுக்கு போகும்போது அது ரோட்டோரமா
இருந்த பெரிய பள்ளத்துல விழுந்து விபத்துக்குள்ளாகி,அதுல இருந்த ஏழு
பேரும்  உயிருக்கு  போராடிக்கிட்டு  இருந்தப்ப, அந்த வழியா வந்த
வெற்றிவேல் அவங்கள தூக்கிட்டுபோய் ஹாஸ்பிட்டல்ல சேத்ததால
உயிர் பிழைச்சாங்க. அந்த ஏழுபேரும் வோட்டு போடலேன்னா  நான்
இன்னிக்கு எம்.எல்.ஏ இல்ல.அன்னிக்கு அது நம்ம கட்சிக்கொடி பறந்த
காருன்னு  தெரிஞ்சும்  மனிதாபிமானத்தோட  நம்ம  ஆதரவாளர்கள
காப்பாத்தினாரு வெற்றிவேல். அந்த நன்றியை எப்படிடா மறக்கமுடியும்?
அன்னிக்கே கந்துவட்டி,கட்டப்பஞ்சாயத்துன்னு ரௌடித்தனம் பண்ணிக்
கிட்டு இருந்த திராவிடபாண்டியன் செத்துப் போயிட்டான்டா. இப்ப புது
மனுஷனா மக்களுக்கு  தொண்டு  செய்யப்போறேன். அதோட  அந்த
வெற்றிவேல் எம்.எல்.ஏ ஆனா இந்த தொகுதிக்கு என்னென்ன நல்லகாரியம்
செய்ய ஆசைப்பட்டாரோ அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து நான்
செய்யப்  போறேன்"என்ற திராவிடபாண்டியன் காரில் ஏறி அமர, அது வெற்றிவேல் வீட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது.

       
         

No comments:

Post a Comment